அரசாங்கம் போதைப்பொருளை கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைக்கு நாங்கள் பூரண ஆதரவளிக்கிறோம் : ஆனால் அதனை அரசியலாக்க வேண்டாம் - ரிஷாத் பதியுதீன்
அரசாங்கம் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு எடுத்துவரும் நடவடிக்கைக்கு நாங்கள் எமது பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதனை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட உரை மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைக்கு நாங்கள் எமது பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதனை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். எந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும் அவர்களை அவர்களின் அரசியலுக்காக காட்டிக்கொடுத்து, உண்மையான போதைப்பொருள் கடத்தல் காரர்களை பாதுகாக்கும் பாவச் செயலை நாங்கள் செய்யக்கூடாது.யார் செய்தாலும் தராதரம் பார்க்காமல் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போமானால் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை காப்பாற்றிக்காெள்ள முடியும் என நினைக்கிறோம்.
அத்துடன் அரசாங்கம் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புக்காக நிதி ஒதிக்கி இருக்கிறது. குறிப்பாக 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அந்த மண்ணில் காணி இல்லாமல் அந்தரப்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு மீள் குடியேறச்சென்றபோது எந்தவொரு அரசியல்வாதியும் அந்த மாவட்டத்தில் அவர்களை பார்க்கவில்லை. நான் வன்னி மாவட்டத்தில் எம்.பியாக இருந்தாலும், அமைச்சராக இருந்த காலப்பகுதியில், அந்த மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை மேற்கொண்டிருந்தேன். என்றாலும் காணி பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் அரச காணியில் ஒரு அங்குல காணியைக்கூட யாரும் பெற்றுக்கொடுக்கவில்லை. அதனால் அதிகமானவர்கள் திரும்பிச்சென்றார்கள்.
என்றாலும் நாங்கள் தனியாருக்கு சொந்தமான காணியை பெற்றுக்காெண்டு, கொஞ்சம்பேருக்கு பெற்றுக்கொடுத்தோம். அந்த மக்கள் அங்கு தொட்டில்களை அமைத்துக்கொண்டு,தண்ணீர் வசதிகள் இல்லாமல் மிகவும் கஷ்டத்துடன் இருக்கிறார்கள். கடந்த அரசாாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி அந்த பகுதி வீதிகளை அமைப்பதற்கும் த்ண்ணீர் வசதிகளை செய்துகொடுக்க ஆளுநர் ஊடாக 120 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொடுத்தேன். அந்த பணம் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானபோது அது திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. அதனால் அந்த பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இராமலிங்கம் சந்திரசேகரன், இளங்குமரன் எம்பியிடம் சுட்டிக்காட்டினேன். ஆனால் யாரும் அவர்களைச் சென்று பார்க்கவில்லை. அதனால் வட மாகாண ஆளுநர் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று வடக்கில் 2ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கப்போவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அதன்போதாவது இந்த மக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோன்று மன்னாரில் கூட்டுறவு கட்டிடம் ஒன்றை நான் அமைச்சராக இருக்கும்போது கட்ட ஆரம்பித்தேன்.அதை கட்டிமுடிக்க இன்னும் 600 மில்லியன் ரூபா தேவை என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது. அதனால் அரசாங்கத்துக்கு சிரமம் இல்லாமல் வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றுடன் பேசி, இந்த பணத்தை பெற்றுக்கொடுக்க நான் நடவடிக்கை எடுத்துள்ளபோதும் அது தொடர்பான விடயங்களை அமைச்சர் வசந்த சமரசிங்கவின் செயலாளருக்கு தெரிவித்துள்ளபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதற்காக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பதாக தெரிவித்தபோதும் ஒருவருடம் கடந்தும் இன்னும் அதனை செய்யவில்லை. இது தொடர்பில் அமைச்சர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் மன்னார் புத்தளம் வீதியை புனரமைப்பதாக ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்திருந்தார். ஆனால் வரவு செலவு திட்டத்தில் அதற்காக எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மன்னார் ஜெட்டியை புனரமைப்பு செய்யும் வேலையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் இந்தியாவில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்துவர முடியும். இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.மேலும் முத்துநகர் விவசாய மக்கள், இன்று அவர்களின் காணிகள் வெளிநாட்டுக்கு விற்பனை செய்யப்போகிறதாக தெரிவித்து போராடி வருகிறார்கள். அந்த மக்களின் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி அவர்களுக்கு உரிய காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.




Post a Comment